Tuesday, December 19, 2006

புகைப்பட கவிதை - 2

சிரிப்பை மறைத்தாய் ...
ஏழ்மையை ... ?!

புகைப்பட கவிதை - 1


ஒரு முத்தம் கவிதையாகிறது ...

Thursday, November 16, 2006

மழைக்கால கவிதைகள் ... 1

உன் நெற்றி மீது விழுந்து
இதழ் வழி செல்லும் - ஒரு
துளி மழை - என்
நாவின் தாகத்திடம் விலை பேசியது ...!

உன்
விழிகளை
புதிய மீனினம் என்று ...!
கடல் விட்டு ஓடி வந்தது
மழை ...!!

உன்
இதழின் ஈரம் கண்ட
மேகங்கள் தாகம் தீர்க்க
மழை மழையாய் பொழிந்தது
உன்னை தேடி ...

தினமும்
நிலவை ரசித்து அலுத்த
விண்மீன்கள்
இன்று உதிர்ந்து விழுகிறது - மழைத்துளிகளாய் ...
பூமியில் என் நிலவைத் தேடி ...!

மழையில் நனையாதே
உன் அழகில்
நனைந்து நின்று விடப் போகிறது
மழை ...!

மழையில்
நீ நனையும் அழகை பார்த்து ...
உறுகி
உரைந்து
உடைகிறது - ஆதவன்
ஆலங்கட்டி மழையாய் ...!

மழையில்
உன் அழகை ரசித்த மேகம்
மழைத்துளிகளின் விழிகளில்
ஞாயிறின் கரங்களால் எழுதியது
வானவில் - என்னும் கவிதையை ...!!!

தனக்கும்
உன் கூந்தலின்
நிறம் வேண்டுமாம் ...
மழையாய் அழுதுவிட்டு
மறைந்தது - வானவில் ...!

இன்று
வானிலை அறிக்கையாக
தன் விடுமுறையை அறிவித்து விட்டு
சென்றது மழை - இருந்தும்
துவட்டிய உன் கூந்தலில் இருந்து
விழுந்த துளிகள் தரும்
எனக்கான மழையை ..!

./பழனி

Monday, September 11, 2006

நேற்று ... இன்று ... நாளை ...

"நான்"
என்பது
நானாக இறந்த காலம் ...

"நீ"
என்பது
என்னோடிருக்கும் நிகழ் காலம் ...

"நாம்"
என்பது
நமக்காக காத்திருக்கும் எதிர் காலம் ...

./பழனி

Wednesday, August 23, 2006

விடுமுறைவிட்ட மழை ...!

இன்று
வானிலை அறிக்கையாக
தன் விடுமுறையை அறிவித்து விட்டு
சென்றது மழை - இருந்தும்
துவட்டிய உன் கூந்தலில் இருந்து
விழுந்த துளிகள் தரும்
எனக்கான மழையை ..!

./பழனி

Friday, August 11, 2006

கவி.. தா .. ?!

பெண்னே ..!
உன்னை படைத்த
ஆணவத்தில் - பிரம்மன் ...

"என்
கவியே இனி - கவி
தா .. ?!" என்றான்,

நானும்
"இனி என் கவியே ..
கவிதா .. !! " என்றேன்.


./பழனி

குறிப்பு : "கவிதா" என்னும் பெயர் கற்ப்பணையே ... சொற்சுவைக்காக சேர்க்கபட்டவையே ..!! ;-)

Tuesday, August 08, 2006

தஞ்சையில்...தலைக் கவிழ்ந்தேன் ..

தஞ்சை
பெரிய கோயிலை - என்னுடன்
சுற்றினான் ஒரு வெள்ளையன்

அவன்
எந்நாடு என்று நானறியா - இருந்தும்
என்னாட்டுக் கலை கண்டு
வாய்ப்பிளந்த போது
எனக்குள்
ஒரு இராஜராஜன் பெருமிதத்தோடு ...

வானுயர்ந்த கோபுரம் போல்
என்னாடே உயர்ந்தது என்று
தலைநிமிர்ந்து திரும்பினேன் ...

கோயில் தலைவாசலில் - அந்த
அந்நியனைச் சுற்றி ஒரு எம்மக்கள்
இரு கைகள் எந்தி யாசகம் கேட்டு ...

சற்று முன்
தலைக்கேறிய தலைக்கணத்தில்
தலைக் கவிழ்ந்து நடந்தேன் ...

ஒர்
ஏழை இந்தியனாக
ஏழ்மை கேள்விகளுக்கு
விடைத் தேடி ... !!!

./பழனி

Monday, August 07, 2006

என் விழிகளில் பார் ...!!!

கண்ணாடியில்
உன் பிம்பத்தை விட - நீ அழகு
பிதற்றல்யில்லை !!
ஒரு முறை உன்னை - என்
கவிதைகளில் பார் ...
இன்னும் சந்தெகம் என்றால்
என் விழிகளில் பார் ...!!!

Monday, July 17, 2006

நீ.. நான்.. என் கவிதை ..

நீ
அங்கங்கே விட்டுச் சென்ற - மௌனங்கள்
நான் கோர்த்தால்
அது ஒரு கவிதை ...

நான்
எழுதிய கிறுக்கல்கள்
நீ
படித்தால்
அதுவும் ஒரு கவிதை ..

காலையில்
நீ என் மீது உதிர்த்த புன்னகை
இரவில்
தூங்கும் போது நினைக்கையில்
பிறக்கும் ஒரு கவிதை ..

மாலையில்
தனிமை கையில் சறுகாக என்றோ
நீ சூடிய பூ
அதன் வாசம் நுகர்ந்து - நான்
என் வசம் இன்னொரு கவிதை ..

நெற்றி மீது ஒரு துளி வேர்வை
நாவின் நூனி வரை தாகம்
தாகம் தீரும் முன்
பிறக்கும் ஒரு கவிதை ..

பிரம்மன் ஏதோ
ஒரு மொழியில் வரைந்த - உன்னை
என் தமிழால் மொழி பெயர்த்தால்
பிறக்கும் இன்னோரு கவிதை ..

கோயிலில்
நேர் எதிரில் - நீ
என் பிரத்தணையிலும் - நீ
இரு புருவங்களுக்கிடையில் சிறு குங்குமம்
அழகு என்று மனம் சொல்லும் முன்
என் தமிழ் சொல்லும் ஆயிரம் கவிதை ..

மார்கழி பனியில்
ஐந்தரை மணியில் - நீ
கோலமிட்ட கோலம்
கோலமாகவே என் நாற்குறிப்பில்
என்றென்றும் கவிதையாக ..

நினைவுகளில் நிறைந்தும் ஏங்கோ - நீ
உன் மௌனம் போல் தனிமை
கனவுகளுக்கு பதிலாக உன் நினைவுகள்
உனை காண காத்திருக்க
காத்திருந்த்க் காலங்கள்
நிகழ்கால கவிதைகளாக ..

வழியில்
உன்னை போல் உன்னோருத்தி
கண்கள் திரும்பி பார்க்க
அதில் ஆர்ச்சர்யமில்லை
ஆனால்
அது பிரம்மனின் படைப்பில்
அது சாத்தியமில்லை - இது
மனம் சொல்லும் கவிதை ..

வானில் வானவில்
தோகை கூந்தல் அவிழ்த்து - நீ
அதனை தலாட்டும் என் கண்கள்
அன்று நீ ரசித்த வானவில்
இன்றும் நிறம் மாறாமல் - என் கவிதைகளில் ..

ஏனோ
என்னை கவிஞனாக்கும் - உன் முயற்சி
வார்த்தைகள் தடுக்கும் உன் அழகு - இருந்தும்
உன் பெயர் மட்டும் சொல்லி
தப்பிப் பிழைக்கும் ஒரு கவிதை ..

கோடை
உன் வேர்வை தேடி
உன் இடைக்கும் நெற்றிக்கும் பயனித்த
உன் கைக்குட்டைஎன்னிடம் சொன்னவை
இங்கே மழைக்கால கவிதையாக ..

(ஒரு தீபாவளியில்)
வானில் நிலவுமில்லை
எனக்கின்னும் ஓர் விடியலுமில்லை
ஊரெல்லாம் ஒளியும் ஒலியுமாக
நான் மட்டும் ஒதுங்கி நின்றேன்
உன் வருகைக்காக ..
பாதத்தின் ஓரத்தில் மருதாணி
பச்சைப் பட்டு தாவணியில் - நீ
இடையில் இடையின் இடை
என்றும் மூன்றாம் பிறையாக ..
இரு கைகளில் ஏந்திய தீபம் - அதன்
ஒளியில் உன் முகம்
பௌர்ணமியாக தோன்றும்
இன்னோரு கவிதை ..

.....
.....
.....

முடியாத கவிதையிது
முடிக்க வேண்டும்
உன் பெயர் சொல்லி - உன்னை
நினைக்காத நாளன்று .. !

Friday, July 14, 2006

சூரியன் !

தினம்
ஆயிரம் கோடி பூக்கள்
காத்திருக்கும் - இருந்தும்

உன்
முகம் காணவே
தினம்
பூக்கும் - சூரியன் !

Wednesday, July 05, 2006

என் கவிதைகளில் ...

என் கவிதைகளில் ...

உயிர் - நீ
மெய் - என் காதல்
உயிர்மெய் - நான்

Monday, June 12, 2006

வானவில் ...

தனக்கும்
உன் கூந்தலின்
நிறம் வேண்டுமாம் ...

மழையாய் அழுதுவிட்டு
மறைந்தது - வானவில் ...!

Sunday, June 04, 2006

குத்திக் காட்டியது - என் தமிழ் ...!

தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கைத் தவறி விழும் முன் சொன்னேன்
"Sorry" தாத்தா என்று ...!

தூங்கும் பொழுது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
"Thanks" ம்மா என்று ...!

நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
"Happy Birthday da" என்று ... !

காலையில் நாளிதழ் படிக்கும் போது எதிர் விட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் - முந்திக் கொள்வேன்
"Good Morning Uncle" என்று ...!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநெகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் - முடித்துக் கொள்வேன்
"Hai" என்று ...!

மாலையில் கடற்க்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
"I Love You" என்று ...!

இரவில் ...
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலை
குத்தியது முள் ...!
"Amma" அம்மா என்று அலறினேன் ...
குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ் ...!

Thursday, May 11, 2006

உன் நிழல் ...

உன் நிழல் ...

ஆதவன்
ஆயிரம் கரங்களில்
வரைந்த ஓவியமடி ...

தமிழில்
என் கரங்கள் வரைய - அதுவும்
ஓர் காவியமடி ....

Monday, May 08, 2006

நீ - என் கடவுளென்றாலும் சரி ...!!!!

இந்த கவிதை எழுதிய நாள் 16 ஜுலை,2004, அன்று தான் கும்பகோணம் பள்ளி தீவிபத்து நடந்தது ... தொலைக்காட்சி செய்தியில் பார்த்த பொழுது, எனக்குள் தோன்றிய கோபம் கடவுளின் மீது மட்டும் தான் ... அந்த ஒரு நாள் நாத்திகனின் கிறுக்கல்கள் இவை ...

ஏய்! மேகங்களே
அழுதிட கற்றுக் கொள்ளுங்கள் - மழலைகள்
அழுகை கேட்டு
அழுதிட கற்றுக் கொள்ளுங்கள் ...!
அன்று உங்கள் கண்ணீர் தூளிகள் போதுமே
அந்த
அக்னியின் கொட்டத்தை அடக்க ...!

வெண்தாமரையாழ்(ள்) !
உன் வீட்டில் தானே நடந்தது
அக்னியின் அத்துமீறல்
காத்திட மனமில்லையோ ...
கல்லில் மனம் கல்லானதோ ? - அங்கே மழலைகள்
கரிக்கட்டைகளாகும் பொழுது ...!

கோணத்திற்கு எத்தனை கும்பம்
அதற்கு கீழ் எத்தனை உருவங்களில் - நீ
பூக்களை கொண்டு தானே பூஜித்தோம்
அப்பூக்களை அக்னி புசிக்க
கைக்கட்டி நின்றது ஏன் ... ?

உன் பதில்...
விதி என்றாலும் விடுவதற்கில்லை ...
நெற்றிக் கண் பிழையென்றாலும் மன்னிப்பதற்கில்லை ...
நீ - என் கடவுளென்றாலும் சரி ...!!!!

என் கவிதையில் ...

என் கவிதைக்கு - நீ
முதல் இலக்கணம் என்றால் ..
உன் அழகுக்கு - என் தமிழே
முதல் அகராதி ...!!

Sunday, May 07, 2006

தாயை மீறிய தாய்மை .... !!!

அம்மாவுக்கு ஒரு வாய்
அம்முவுக்கு ஒரு வாய் - என்று
அமுதூட்டினாள் அம்மா ...

பாப்பாவுக்கு என்று
கையிலிருந்த பொம்மையை காட்டியது குழந்தை ..!
தாயை மீறிய தாய்மை .... !!!